"கார்பல் டனல் சிண்ட்ரோம்"
இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நான், படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட நாமெல்லோரும் ஒரு நாளைக்கு சில(பல) மணிநேரங்களை கணிணியுடன் கழிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.டாம் கூட ஜெர்ரியை துரத்தி துரத்தி அலுத்திருக்கும், நாம் ஒரு நாளில் மௌஸை துரத்துமளவுக்கு துரத்தியிருந்தால். கூப்பிடுபவர்கள் கூடவெல்லாம் கேண்டின் போக கம்பெனி கொடுப்பது, கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கிக்கொண்டு மீட்டிங்குகளில் உட்கார்ந்திருப்பது, அம்மணிகளை தேடிப் போய் கடலை போடுவது என்றெல்லாம் ஓடாய் உழைத்தாலும் சில மணி நேரங்களாவது கணிணித் திரைக்கு முன் சீரியஸாய் முகத்தை வைததுக்கொண்டு பதிவுகளையாவது படித்துக் கொண்டிருக்காவிட்டால் "இவனுக்கெல்லாம் வாங்கற சம்பளம் எப்படித்தான் செரிக்குதோ?" என்று உலகம் நம்மை ஏசும். வீட்டிற்கு வந்தாலும் இதையே தொடர்கிறோம்.அலுவலகத்தில் "நான் ரொம்ப பிஸி" என்று காட்டிக் கொள்வதற்காகவது வீட்டிலும் சில மணிநேரங்கள் அலுவலக வேலை செய்வது போல் நடித்துக்கொண்டே பதிவுகளை மேய்வது, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் பதிவு எழுதுவது, பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக்...