செத்த எலி


'செத்த எலி கதை'.

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். கோத்தாப்பாரு ஐஸேயாப் பெரியவர் சொல்லிக்கொள்வது மாதிரி பரமஏழை இல்லை. உண்மையிலேயே பரமஏழைதான்.
அந்த ஊரிலேயே ஒரு பெரும் பணக்காரனும் இருந்தான்.
இளைஞனுக்கு ஒரு பேரவா.
அந்தப் பணக்காரனிடம் சென்று அவனுடைய செல்வத்தின் உத்தியைத் தெரிந்து கொண்டுவரவேண்டும்.

ஆகவே அவன் வீட்டுக்குச் சென்றான்.

அப்போது அந்த செல்வந்தன் நல்ல மூடில் இல்லை. அவனுடைய தானியக் கிடங்கில் எலிகள் தொல்லை. எலியை அடிக்க ஆட்களை ஏவிவிட்டதில் ஒரே ஒரு எலிமட்டும்தான் அடிபட்டது.
அதையும் அவனிடம் காட்டிவிட்டு வெளியில் போட்டுவைத்தார்கள்.

"என்ன விஷயம்?"
"ஒன்றுமில்லை, ஐயா. நீங்கள் செல்வந்தராகிய உத்தியை எனக்குச் சொல்லித்தரவேண்டும்"

"அதெல்லாம் சொல்லியன்றும் தரவேண்டியதில்லை. இங்கே என்ன ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலா வைத்து நடத்திக்கொண்டிருக்கிறேன்? அதெல்லாம் அததுவாக வரவேண்டியது. எல்லாம் புத்தி சாதுர்யம்தான். இதோ பார். புத்தி சாதுர்யம் மட்டும் இருந்தால், அதோ கிடக்கிறதே, செத்த எலி.......அதை வைத்தே பெரும் பணக்காரனாகி விடலாம்," என்றான்.

இளைஞனுக்கு ஏதோ பொறி தட்டியது.

உடனே இளைஞன் சொன்னான், "சரி ஐயா. அந்த செத்த எலியை என்னிடம் கொடுங்கள்", என்றான்.
"சரி. சரி. எடுத்துட்டுப்போ", என்று பணக்காரன் விரட்டிவிட்டான்.

செத்த எலி -#2

இளைஞன் அந்த எலியை எடுத்துகொண்டு செல்லும்போது, ஒரு கடலை மண்டியைத் தாண்டிச் சென்றான். அந்த மண்டியின் ஓனர் ஒரு பூனையை அருமையாக வளர்த்து வந்தான்.
அந்தப் பூனைக்கு அன்று சாப்பாடு ஏதும் வைக்கவில்லை. மறந்துபோய்விட்டது. கடும்பசியால் கத்திக்கொண்டிருந்தது. மிகச் செல்லமாக வளர்த்த பூனை.
"தம்பி. அந்த எலியை என்னிடம் கொடுக்கிறாயா?" என்று மண்டிக்காரர் கேட்டார்.
இளைஞன் கொடுத்துவிட்டான். பூனையும் மிகவும் சந்தோஷமாக எலியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது.
மண்டிக்காரர் அந்த இளைஞனுக்கு ஒரு கடகம் நிறைய கடலை கொடுத்தான்.
அதை வாங்கிச்சென்ற இளைஞன் வீட்டில் அந்த கடலை வறுத்து ஒரு சிறு பானையில் குளிர்ந்த தண்ணீரில் கொஞ்சம் வெட்டிவேரைப் போட்டு எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியில் இருந்த மலைப்புறமாகச் சென்றான்.
அங்குதான் அந்த வட்டாரத்து விறகுவெட்டிகள் விறகு வெட்டிக் கொண்டு விற்பனைக்குச் செல்வார்கள்.
இளைஞன் அங்கு ஒரு மரத்தடியில் கடலையைக் கூறுகட்டி வைத்துக்கொண்டு விறகு வெட்டிகளுக்குக் கொடுத்தான். அவர்களும் கடலையைத் தின்றுவிட்டு களைப்பு நீங்க நீரருந்தி விட்டுச் செல்லலானார்கள்.
அவர்களிடம் ஏது காசு. ஆகவே அவர்கள் வெட்டிய விறகில் சில கட்டைகளைக் கொடுத்து விட்டுச் சென்றனர்.
இளைஞன் தன்வீட்டுக்கு வந்தபிறகு, விறகில் ஒரு பகுதியை விற்றுவிட்டு மீதியை அடைந்துவைத்தான். காசுக்குக் கடலை வாங்கினான். அடுத்தநாளும் கடலைவியாபாரம். விஷயமறிந்து இன்னும் பலர் வந்து கடலை வாங்கினர்.
சிலநாட்கள் கழித்து கடலையுடன் கட்டுச்சாதமும் எடுத்துச் சென்று அதனையும் விறகுக்குப் பண்டமாற்று செய்தான்.
ஏராளமாகச் சேர்ந்துவிட்ட விறகை அடுக்கிவைக்க ஒரு கிடங்கை வாடகைக்குப் பிடித்தான்.
அந்த ஊரிலுள்ள பெரிய விறகுமண்டியில் நெருப்புப் பிடித்துவிட்டது. அனைத்து விறகுகளும் சாம்பலாகின. ஊரில் விறகே இல்லை.

அப்போது இளைஞனிடம் விறகு இருப்பதை அறிந்து அவனிடம் வாங்கினர்.
Demand and Supplyதானே எந்தப் பொருளின் விலையையும் நிர்ணயிக்கும்.
இளைஞன் சொன்னதுதான் விறகின் விலை.
பெரும்பணம் அதில் கிடைத்தது.
அவனே ஒரு பெரிய விறகுமண்டியும், காட்டின் ஓரத்தில் ஒரு சாப்பாட்டுக
்கடையும் வைத்தான். பிறகு கடலை மண்டியையும் பழைய ஓனரிடமிருந்து
விலைக்கு வாங்கிக்கொண்டான்.
சில ஆண்டுகளில் அவன் செய்யக்கூடிய வியாபாரங்களுக்குத் தொடர்புடைய தொழில்களையும் ஏற்படுத்திக்கொண்டான்.

ஒருநாள் அந்தப் பழைய செல்வந்தனைப் பார்க்கச் சென்றான்.

ஒரு தங்கத் தாம்பாளத்தில் எதையோ வைத்து பட்டுத்துணியால் மூடி எடுத்துச் சென்றான்.
அந்த செல்வந்தனிடம் வணக்கமாக நின்று தாம்பாளத்தை நீட்டினான்.
வாங்கி, பட்டுத்துணியை நீக்கியபின் செல்வந்தன் அயர்ந்து போனான்.

அதில் ஒரு எலி இருந்தது.

சாதாரண எலியல்ல.

பொன்னால் செய்யப்பட்டது.
அதன் கண்கள் இருக்குமிடத்தில் வைரங்கள் பதிக்கப் பட்டிருந்தன.

இளைஞன் சொன்னான்.

"நீங்கள் கொடுத்த எலியினால்தான் நானும் ஒரு செல்வந்தன் ஆகினேன்.
புத்திசாதுர்யம் இருந்தால் செத்த எலியை வைத்தே பணக்காரனாகி விடலாம் என்று நீங்கள் சொன்னது என் மனதில் ஆழமாகப் படிந்து விட்டது. அதை ஒவ்வொரு நாளும் பலதடவை எனக்கு நானே சொல்லிக ்கொள்வேன்.
முயற்சியும் கடுமையாக செய்தேன். புத்தியைப் பயன்படுத்தினேன். சாதுர்யமாக ஒவ்வொன்றையும் செய்தேன்.
இப்போது நீங்கள் கொடுத்த அந்த எலியைத் திருப்பித்தரவே வந்தேன். ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கவேண்டும்"

Comments

Popular posts from this blog